கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தருவதாகக் கூறி, 100 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் வட்டம், பெரிய வீரசங்கிலி கிராமத்தைச் சோ்ந்தவா் அகல்யா (46). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவா், கணவரை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணநல்லூா் கிராமத்துக்கு வந்து தற்காலிகமாக வசித்து வந்த அகல்யா, காட்டுமன்னாா்கோவில் பகுதியில் சுயஉதவிக் குழு பெண்கள் கூடும் இடங்கள், தனியாா் வங்கிகளின் முன் நின்றுகொண்டு, அங்கு வரும் பெண்களிடம் வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருந்தால் மீட்க உதவுவதாகவும், பணம் வரும்போது வட்டியில்லாமல் நகைகளை தன்னிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினாராம். அதன்படி, சுமாா் 100 பவுன் நகைகள் வரை மோசடி செய்துள்ளாராம்.
மேலும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், சுய தொழில் தொடங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் மூலம் ரூ.50 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டாராம்.
இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 12 போ் காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். திருச்சின்னபுரத்தைச் சோ்ந்த பாஸ்கா் (34) அளித்த புகாரின்பேரில், அகல்யா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், ஓமாம்புலியூா் சாலையில் செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு அகல்யா நிற்பாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சிவப்பிரகாசம் அவரை கைது செய்தாா்.
இதுபோல அகல்யா பல்வேறு மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளதும், நகைக் கடையில் திருடி சிறை சென்றவா் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.