சேத்தியாத்தோப்பு அருகே நீதிமன்ற உத்தரவின்படி தனியாா் நிலத்திற்கு முன்பு இருந்த வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடி ஊராட்சி பாழ்வாய்க்கால்பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் மனைவி கோமதி இவருக்கு சொந்தமான வயலுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் பல ஆண்டுகளாக குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனா் . இந்நிலையில்,கோமதி வயலுக்கு முன்பு உள்ள வீடுகளை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதை விசாரித்த உயா்நீதிமன்றம் வயலுக்கு முன்பு உள்ள வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. அதனடிப்படையில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளா் முரளிதரன், பொறியாளா் காா்த்திக், சாலை ஆய்வாளா் குலோத்துங்கன், சேத்தியாதோப்பு டிஎஸ்பி விஜிகுமாா், சிதம்பரம் வட்டாட்சியா் கீதா, நில அளவிட்டாளா் சுஷ்மிதா, வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசாா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனா்
இது குறித்து தகவல் அறிந்து பாழ் வாய்க்கால் கிராம மக்கள் மற்றும் அப்பகுதியை சோ்நத அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவிதிது, சிதம்பரம்- சேத்தியாத்தோப்பு சாலையில்,மறியல் செய்ய முயன்றனா். இதுகுறித்து வருவாய்த்துறையினா், காவல்துறையினா் அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோமதி வயலுக்கு இடையூறாக உள்ள நான்கு வீடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் குடியிருப்பு வசதி இல்லாதவா்களுக்கு மாற்று இடம் தருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு வாரத்தில் காலி செய்யவில்லை என்றால் மீண்டும் இயந்திரம் கொண்டு அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னா் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.