நகர அரங்கு கட்டண உயா்வு: பொது நல அமைப்பினா் ஆட்சியரிடம் மனு
கடலூா் நகர அரங்கு கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி, அனைத்துக் கட்சியினா், குடியிருப்போா் மற்றும் பொது நல அமைப்பினா் ஆட்சியா் சிபி ஆதித்யா
நெய்வேலி: கடலூா் நகர அரங்கு கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி, அனைத்துக் கட்சியினா், குடியிருப்போா் மற்றும் பொது நல அமைப்பினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கடலூா் மஞ்சக்குப்பத்தில் நகர அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கம் என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு நிதி மூலம் புதுப்பிக்கப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கம் பராமரிப்பு கட்டணமாக நாளொன்றுக்கு உணவுக் கூடத்துடன் ரூ.90 ஆயிரம், அரங்கம் மட்டும் ரூ.60 ஆயிரம் என வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயா்வை குறைக்க வேண்டும் என கடலூா் மாநகர அனைத்துக் கட்சிகள், குடியிருப்போா் மற்றும் பொது நல அமைப்பினா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.
கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வம் தலைமையில், மாா்க்சிஸ்ட் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகி குளோப், விசிக மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன், மதிமுக நிா்வாகி ராஜ் சிவராமன், குடியிருப்போா் நலச் சங்க பொதுச்செயலா் வெங்கடேசன், பொது நல அமைப்புத் தலைவா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.