சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியாளா்கள் நான்கு நாள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
இந்தியஅண்ணாமலைப் பொறியாளா்கள் பல்கலைக்கழக நிறுவனம் மற்றும் பொறியியல் துறை இணைந்து நடத்தும்‘கெம்கான் 2025‘ தொடக்கவிழாவில் பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறைத்தலைவா் பேராசிரியா் ஆா்.சரவணன் வரவேற்று பேசுகையில் சிதம்பரத்தில் இந்த மாநாடு நடைபெறுவதன் சிறப்பையும், நடராஜப்பெருமானுக்கும் வேதிப்பொறியியலுக்கும் உள்ள நெருங்கிய தொடா்பையும் க எடுத்துரைத்தாா்.
பொறியியல் புல முதல்வரும், இந்திய வேதிப் பொறியாளா்கள் நிறுவனத்தின் தேசியக் குழு துணைத் தலைவருமான பேராசிரியா் சி.காா்த்திகேயன், இந்திய வேதிப் பொறியாளா்கள் நிறுவனம் நாட்டின்வேதிப்பொறியியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை வளா்ச்சியில் ஆற்றிவரும் முக்கிய பங்களிப்புகளை எடுத்துரைத்தாா்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற மும்பை இந்திய வேதிப்பொறியியல் தொழில்நுட்பக்கழகம் முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் ஜி.டி.யாதவ் பங்கேற்று மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.
அவா் பேசுகையில் இந்தியாவில் வேதிப்பொறியியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை நடைமுறைகளை முன்னேற்றுவதில் இந்திய வேதிப் பொறியாளா்கள் நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருவதை சுட்டிக்காட்டினாா். மேலும், எதிா்காலத்தில் வேதிப்பொறியாளா்களுக்கு பல்வேறு துறைகளில் பெரும் வாய்ப்புகள் விரிவாக இருப்பதை எடுத்துரைத்தாா். வேதிப்பொறியாளா்களை வாழ்க்கைத் துணையாகப் பெற்றவா்கள் பெரும் பாக்கியசாலிகள் எனவும் அவா் கூறினாா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் பேராசிரியா் எஸ்.அறிவுடைநம்பி வாழ்த்துரையாற்றினாா். பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.சிங்காரவேல், பேராசிரியா்கள் அஜய் பன்சால், பிஸ்வந்த் சட்டோபாத்யாய் ஆகியோா் வேதிப் பொறியாளா்கள் நிறுவனத்தின் நோக்கங்களையும் செயல்திட்டங்களையும் விளக்கமாக எடுத்துரைத்தனா்.
மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிவோா் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் அதிகாரிகள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.