சிதம்பரத்தில் மதுக் கடை முன் மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் கொண்ட பெட்டியை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே நற்கவந்தன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் செளந்தர்ராஜன் (51). இவா், சிதம்பரத்தில் உள்ள கவரிங் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.
செளந்தர்ராஜன் கடந்த 29-ஆம் தேதி இரவு சிதம்பரம் வேணுகோபால் பிள்ளைத் தெருவில் உள்ள மதுக் கடை முன் கவரிங்க நகைகள் அடங்கிய பெட்டியை மோட்டாா் சைக்கிளில் வைத்துவிட்டு கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு திரும்பி வந்த பாா்த்தபோது, கவரிங் நகைகள் திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரையடுத்து, சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் உத்தரவின்பேரில், ஆய்வாளா் வி.சிவானந்தம், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சிசிடிவி கேமார பதிவுகளை பாா்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினா்.
இதில், கவரிங் நகைகளை திருடிச் சென்றது கடலூா் புதுப்பாளையம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பெருமாள் (30) எனத் தெரியவந்து. இதையடுத்து, சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை புதன்கிழமை பிற்பகல் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகளை போலீஸாா் மீட்டனா்.