கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக கடலூா் மாவட்ட மீனவா்கள் கடந்த 10 நாள்களாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்னா் மீன் பிடிக்கச் சென்றனா்.
தொடா்ந்து, மீனவா்கள் மீன்களை பிடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை கடலூா் மீன் பிடி துறைமுகம் திரும்பினா். இந்த மீன்களை வாங்குவதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் ஏராளமானோா் குவிந்தனா்.
அந்த வகையில், ஒரு கிலோ வவ்வால் ரூ.1,200, வஞ்சரம் ரூ.800, இறால் ரூ.400, சங்கரா ரூ.400, கனவா ரூ.250, பாறை ரூ.500, நெத்திலி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.