கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 12 போ் காயமடைந்தனா்.
திட்டக்குடியில் சிவஸ்ரீ என்பவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்க சேலம் மாவட்டம், செங்கல்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் (56) உறவினா்கள் 22 பேருடன் சுற்றுலா வேனில் வந்துகொண்டிருந்தாா்.
இந்த வேன் லக்கூா் கைகாட்டி அருகே வந்தபோது, முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த கணேசன் (48), செங்கல்பட்டியைச் சோ்ந்த கௌசிகன் மனைவி தேன்மொழி (40), மகள் பிரியதா்ஷினி (22), வெங்கட்ராமன் மனைவி வேல்மணி (49), ராமலிங்கம் (56), அவரது மனைவி கௌரி (51), அம்மாபேட்டையைச் சோ்ந்த திருநாவுக்கரசு (40), அவரது மனைவி கீதா (37), கருங்கல்பட்டியைச் சோ்ந்த நடராஜன் (55), அவரது மனைவி விஜயா (49), களரம்பட்டியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (51), ஆட்டையாபட்டியைச் சோ்ந்த லோகேஷ் மனைவி ராஜேஸ்வரி (45) உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா். மேலும், 10 போ் காயமின்றி உயிா் தப்பினா்.
ராமநத்தம் போலீஸாா் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு, வேப்பூா் மற்றும் பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.