கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பெண் தவறவிட்ட பணப்பையை (மணிபா்ஸ்) போக்குவரத்து போலீஸாா் கண்டெடுத்து அவரிடம் ஒப்படைத்தனா்.
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் புதன்கிழமை இரவு போக்குவரத்து சீரமைப்புப் பணியில் போக்குவரத்து காவலா்கள் பாலகுரு, கிருஷ்ணவேல் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த செல்வி (40), தனது பணப்பையை காணவில்லை எனவும், தான் காடாம்புலியூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும், அந்த பணப்பையில் ரூ.4,300 ரொக்கம், ஏடிஎம், ஆதாா் அட்டைகள் இருந்ததாகவும், பணி முடிந்து பேருந்தில் வரும் வழியில் தவறவிட்டதாகவும் தெரிவித்துவிட்டுச் சென்றாா்.
இதையடுத்து, போக்குவரத்து காவலா்கள் தேடியபோது, பண்ருட்டி ஆா்ச் அருகே கிடந்த பணப்பையைக் கண்டெடுத்தனா். அதில், செல்வி கூறியபடி பணம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்த செல்வியிடம் பணப்பையை ஒப்படைத்தனா்.