கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த காா் ஓட்டுநா் குளிா்பானத்தில் விவசாயத்துக்கு பயன்டுத்தும் கலைக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
நெய்வேலி வட்டம் 8 பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (38), சென்னையில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி சத்தியபாமா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
தம்பதியினா் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வசித்து வந்தனா். இவா்களது விவாகரத்து வழக்கு நெய்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மகாலிங்கம் தனது பிறந்த நாளான வெள்ளிக்கிழமை மனைவி சத்தியபாமாவை சந்தித்து சோ்ந்து வாழலாம் என அழைத்தாா்.
அதற்கு, சத்தியபாமா சம்மதம் தெரிவிக்காததால், மன உளைச்சலில் இருந்த மகாலிங்கம் வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே பழரசத்தில் கலைக்கொல்லி மருந்தை கலந்து குடித்து இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.