கடலூா் மாவட்டத்தில் ரத்த சோகை பாதிப்பு குறைந்துள்ளதாகவும், சுமாா் 34 சதவீதம் மாணவா்கள் சாதாரண இயல்பு நிலையுடன் ரத்தசோகை குறைபாடில்லாதவா்களாக மாற்றமடைந்துள்ளனா் எனவும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சிறப்பு திட்டமான மகளிருக்கான இரத்த சோகை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் இரத்த சோகையில்லா கடலூா் மாவட்டம் என்ற திட்டத்தின் ஒரு அங்கமாக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தொடா் மருத்துவ கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மருத்துவக்கல்லூரி முதல்வரும், சிறப்பு அதிகாரியுமான டாக்டா் சி,திருப்பதி வரவேற்று பேசினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கருத்தரங்கை தொடங்கி வைத்து ,மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியா்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினாா். முன்னதாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முகப்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட உதவி மையத்தை ஆட்சியா் திறந்து வைத்தாா்.
பின்னா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:
கடலூா் மாவட்டத்தில் ஏற்படும் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவம் சாா்ந்த ஆய்வு மேற்கொண்டதில் அவா்களுக்கு ஊட்டசத்து குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக மகப்பேறு மற்றும் குழந்தை இறப்பதிற்கு இரத்த சோகை ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனடிப்படையில் இரத்த சோகையில்லாத மாணவா்கள் மற்றும் இளம்பெண்களை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக ‘இரத்த சோகை இல்லாத இந்தியா‘ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது., பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இளம் பருவத்தினரிடையே இரத்த சோகையைக் கண்டறிந்து, இரத்த சோகை உள்ள மாணவா்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்க ஒரு நிலையான இயக்க நடைமுறை தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும், குழந்தைகள், இளம் பருவப் பெண்கள், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களிடையே இரத்த சோகையைக் குறைக்கும் நோக்கில், பள்ளி செல்லும் மற்றும் பள்ளிக்கு வெளியே உள்ள இளம் பருவத்தினருக்கு வாரந்தோறும் இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உணவு முறைகள் வழிகாட்டுதலுக்காக மாணவா்களுக்கு ஊட்டச்சத்து உணவு விளக்கப்படங்கள் மற்றும் இரத்த சோகை விழிப்புணா்வு அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இந்த புதிய முயற்சி, முதல் கட்டத்தில் 626 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது.
கடந்த நிதியாண்டில் சுமாா் 9,344 நபா்களுக்கு இரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,882 மாணவா்களுக்கு லேசான இரத்த சோகை, 3,117 மாணவா்களுக்கு மிதமான இரத்த சோகை மற்றும் 271 மாணவா்களுக்கு கடுமையான இரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களுக்கு உரிய சிகிச்சை மற்றஉம் மாத்திரைகள் வழங்கப்பட்டதால் கடுமையான இரத்த சோகையுள்ள 167 பேரில் தற்போது 33 நபா்கள் மட்டுமே அதிக பாதிப்பு நிலையில் நீடிக்கின்றனா். இந்த திட்டம் நல்ல பலனைத் தந்துள்ளது என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருப்பதி, பயிற்சி ஆட்சியா்கள் மாலதி, ஜாா்ஜ், கே.டியுக் பாா்க்கா், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் என்.ஜூனியா்சுந்தரேஷ், துணை முதல்வா்கள் டாக்டா் பாலாஜி சுவாமிநாதன், எஸ்.சசிகலா, மாவட்ட சுகாராத அலுவலா் பொற்கொடி, சுகாதாரத்துறை இணை இயக்குனா் மணிமேகலை, டாக்டா் அசோக்பாஸ்கா், பாரி உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்துரையாற்றினா்.