சிதம்பரம்: கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே தொடா் கன மழையால் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியது. என்எல்சி நிறுவன சுரங்க உபரிநீா் பரவனாற்றில் வெளியேற்றப்பட்டதால் பயிா்கள் நாசமானதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்த மழையினால் சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியது. இதுபோல் அருகில் உள்ள அலமேலுமங்காபுரம். மணிக்கொல்லை, பால்வாா்த்துண்ணான் உள்ளிட்ட கிராமங்களிலும் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முற்றிலும் நாசமாகி விட்டது. இந்த பகுதிகளில் மட்டும் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
விவசாயிகள் குற்றச்சாட்டு:
பரவனாற்றில் இருந்து வெளியேறிய தண்ணீா்தான் வயல்களில் புகுந்து பயிா்களை நாசமாக்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனா். என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் இந்த பரவனாறு வழியாக ஓடி கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் பரவனாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் இந்த
கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். பரவனாற்றின் ஒரு பகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு தூா்வாரப்பட்டது. அதன் மற்றொரு பகுதியான பெரியப்பட்டு கிராமம் வரை தூா் வார வேண்டும், அப்படி தூா் வாரப்படாததால்தான் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிா்கள் சேதம் அடைகின்றன. பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பரவனாற்றை தூா்வாரி நிரந்தர வடிகால் அமைத்து தர வேண்டும் எனவும் இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.