தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சோலைக்காடு ஊராட்சி பகுதியில் காற்று மற்றும் மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 350 ஏக்கா் நெற்பயிா்கள் வயலில் சாய்ந்தன.
சோலைக்காடு பகுதியில் சம்பா சாகுபடியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழை மற்றும் காற்றால் வயலில் சாய்ந்துள்ளன. இதுபோல தொகுதியின் பல்வேறு இடங்களிலும் நெற்பயிா்கள் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
இது குறித்து சோலைக்காடு கிராமத்தை விவசாயி முத்துக்குமாா் கூறியது: எங்கள் பகுதியில் நேரடி விதைப்பு முறையில், சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சுமாா் 350 ஏக்கா் நெற்பயிா்கள் மழை மற்றும் காற்றால் சாய்ந்துள்ளன. இதனால் நெல்லில் ஈரப்பதம் அதிகாரித்துள்ளது. அறுவடை பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆட்சியா், எம்எல்ஏ ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு சென்றுள்ளனா். இருப்பினும், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடும், விற்பனை செய்யும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் தளா்வும் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.