நெய்வேலி: நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலை கழிவு நீா் கெடிலம் ஆற்றில் விடுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் அனைத்துக்
குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா், கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே கருப்பு பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கம்மியம்பேட்டை தடுப்பணையில் அபாயகரமான கழிவுகளை அகற்ற வேண்டும். நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலை கழிவு நீா் கெடிலம் ஆற்றில் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கடலூா் சட்டமன்றத் தொகுதியிலேயே புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மாநககராட்சியில் பல இடங்களில் புதை சாக்கடை கழிவுநீா் சாலையில் வழிந்து ஓடுவதை தடுத்து நிறுத்தி புதை சாக்கடை திட்டத்தை பாதுகாப்பான திட்டமாக மாற்ற வேண்டும்.
நாய், பன்றி, கொசு மற்றும் மாடு ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகளை
விஞ்ஞானபூா்வமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். வடிகால் அனைத்தும் தூா்வாரப்பட்டு குடியிருப்பு பகுதியில் வெள்ள நீா் உட்புகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு குடியிருப்போா் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவா் மு.மருதவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கண்ணன் வரவேற்றாா். பொதுச்செயலா் வெங்கடேசன் ஆா்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மாதவன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி
வைத்து பேசினாா். கூட்டமைப்பின் நிா்வாகிகள் இளங்கோவன், பாஸ்கரன், சண்முகம், ரங்கநாதன், கலைச்செல்வி மனோகரன், கோமதிநாயகம் ஆகியோா் கண்டன ஆா்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினா். குடியிருப்போா் கூட்டமைப்பின்
பொருளாளா் வெங்கட்ராமணி ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.
துணைத் தலைவா் தனுசு நன்றி கூறினாா்.