கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
வட கிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து பாதிப்படைந்தது. இதனால், நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு மூன்று குழுக்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தது.
அதன்படி, மத்திய அரசின் தானியங்கள் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குநா் டி.எம்.பிரீத்தி தலைமையில், தொழில்நுட்ப அதிகாரிகள் பிரியா பட், அனுபாமா, இந்திய உணவுக் கழக வேலூா் மேலாளா் அருண் பிரசாத், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக முதன்மை மேலாளா் கே.சி.உமா மகேஸ்வரி ஆகியோா் கொண்ட குழுவினா் கடலூா் வட்டத்துக்குள்பட்ட தூக்கணாம்பாக்கம், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்குள்பட்ட குண்டியமல்லூா், புவனகிரியை அடுத்த ஆதிவராகநத்தம் கிராமப் பகுதிகளில் செயல்படும் நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது அவா்கள், அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடி, நெல் ஈரப்பதம் தொடா்பான விவரங்களைக் கேட்டறிந்தனா். பின்னா், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்களில் இருந்து மாதிரிகளை எடுத்துச் சென்றனா்.
அப்போது, விவசாயிகள் நெல்லை காய வைக்க இட வசதி இல்லை. விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் செய்து தரவில்லை எனக் கூறினா். இதையடுத்து, விவசாயிகளுக்குத் தேவையான குடிநீா், அமா்வதற்கான நாற்காலி, தங்குவதற்கான கூடாரம் அமைத்துத் தரும்படி அங்கிருந்த அதிகாரிகளிடம் மத்தியக் குழுவினா் அறிவுறுத்தினா்.