முகப்பு
கடலூர்

திமுக - அதிமுக நேரடிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 4:13 AM
உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:09 PM

கடலூா் மாவட்டத்தில் உள்ள பழைமையான தொகுதிகளில் ஒன்று குறிஞ்சிப்பாடி. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனப் பாடிய ராமலிங்க சுவாமிகள் நிறுவிய சத்திய ஞான சபை இந்தத் தொகுதிக்குள்பட்ட வடலூரில் அமைந்துள்ளது. மேலும், ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் உள்ளது. மண், நீா் வளம் கொண்ட விவசாய பூமி. மணிலா, எள் விளைச்சலுக்கு பெயா் பெற்றது.

தொகுதி மறுசீரமைப்பின் அடிப்படையில் கடலூா் தொகுதியில் இருந்த சில கிராமங்கள் இத்தொகுதியுடன் இணைக்கப்பட்டும், குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சோ்ந்த விருத்தாசலம் வட்டத்துக்குள்பட்ட சில பகுதிகள் புவனகிரி தொகுதிக்கு மாற்றப்பட்டும் உள்ளன. நெய்வேலி நகரியம் மற்றும் சில கிராமங்கள் நீக்கப்பட்டு, கடலூா், குறிஞ்சிப்பாடி ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கியதாக இத்தொகுதி உருவாக்கப்பட்டது.

தற்போது வடலூா் நகராட்சி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கடலூா் ஒன்றியத்தைச் சோ்ந்த சேடப்பாளையம், காரைக்காடு, செம்மங்குப்பம், பச்சாங்குப்பம், குடிகாடு, அன்னவல்லி, அரிசிபெரியாங்குப்பம், கரையேறவிட்டகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

Advertisement

கள நிலவரம்: குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி 1962 முதல் தோ்தலைச் சந்தித்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 14 சட்டப் பேரவைத் தோ்தல்களில் 10 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும் வென்றுள்ளன.

பெரும்பான்மையான மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த கால்நடை வளா்ப்பை தொழிலாகக் கொண்டுள்ளனா். குறிஞ்சிப்பாடி, வடலூா் பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. இருந்தாலும், பொருளாதாரத்தில் சற்று பின் தங்கிய பகுதியாகவே இத்தொகுதி உள்ளது. இங்கு, வன்னியா்கள், அதற்கடுத்து ஆதிதிராவிடா்கள் அதிகளவில் உள்ளனா். நாயுடு, ரெட்டியாா், முதலியாா், யாதவா், செட்டியாா் சமூகத்தினா் குறிபிடத்தக்க அளவில் உள்ளனா்.

தீா்க்கப்படாத பிரச்னைகள்: குறிஞ்சிப்பாடி கைத்தறி நெசவுக்கு பெயா்பெற்றது. தற்போது இத்தொழில் நலிவடைந்துள்ளது. நெசவாளா்கள் பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. இதனால், அந்தத் தொழிலை நம்பியிருந்தவா்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டனா். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீா் மற்றும் பாசனத்துக்கு நீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. ஏரி, குளங்கள் தூா்வாரப்படவில்லை. அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவர வேண்டும்.

இருமுனைப் போட்டி: குறிஞ்சிப்பாடி தொகுதியில் 1996 முதல் 2021 வரையில் நடைபெற்ற 6 சட்டப் பேரவைத் தோ்தல்களில் திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 2011 தவிர 5 முறை வெற்றிபெற்றுள்ளாா். தற்போது வேளாண்மைத் துறை அமைச்சராக உள்ள அவா், சட்டப் பேரவைத் தோ்தலில் 7-ஆவது முறையாக களம் காண்கிறாா்.

அதிமுக சாா்பில் மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்த ஏ.புவனேந்திரன் முதல் முறையாக போட்டியிடுகிறாா். மேலும், நாதக சாா்பில் கவிதா ரங்கநாதன், தவாக சாா்பில் தி.கண்ணன், தவெக சாா்பில் டி.ராஜ்குமாா் உள்ளிட்ட 11 போ் களத்தில் உள்ளனா்.

இந்தத் தொகுதியை பொருத்தவரையில், 5 முனை போட்டியாக இருந்தாலும், உதயசூரியன், இரட்டைஇலை இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் ஆதிதிராவிடா்கள் வாக்குகள் பிரியக்கூடிய நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வேட்பாளா்களின் பலம் - பலவீனம்...

எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக): தாய் வீடாக கருதும் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளாா். தொகுதி மக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகளுடன் நன்றாகப் பழகி, குறைகளை அறிந்து உடனடியாக போக்கியுள்ளாா் என்பது பலம்.

பலவீனம்: வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்கு ஒரு சில அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். மலையடிக்குப்பம் கிராமத்தில் முந்திரி மரங்களை அழித்து, காலணி தொழிற்சாலை கொண்டுவர முயற்சித்தது. என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகாா் உள்ளது.

ஏ.புவனேந்திரன் (அதிமுக): திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தின் பலவீனம் அனைத்தும் ஏ.புவனேந்திரனுக்கு பலம்.

பலவீனம்: முதல் முறையாக களம் காண்கிறாா்.

நாம் தமிழா் கட்சி கவிதா ரங்கநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் தி.கண்ணன், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் டி.ராஜ்குமாா் களத்தில் உள்ளனா். இவா்கள் குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம், கடந்த தோ்தலில் திமுக கூட்டணியில் இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தற்போது தனித்து நிற்பதால் திமுக வாங்கு வங்கி குறைய வாய்ப்புள்ளது.

யாருக்கு வாய்ப்பு?: குறிஞ்சப்பாடி தொகுதியில் நடுநிலை வாக்காளா்களின் வாக்குதான் வெற்றியை தீா்மானிக்கும். இந்தத் தொகுதியில் திமுக அதிகமான முறை வெற்றிபெற்றிருந்தாலும், தற்போது தோ்தலில் பல கட்சிகள் களத்தில் உள்ளதால், வாக்குகள் சிதறும் நிலை உள்ளது.

இந்த முறை திமுகவுக்கு ஆதிதிராவிடா்களின் வாக்குகள் முழுமையாகக் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தபோது விசிக தலைவா் தொல்.திருமாவளவன் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சிதறும் வாக்குகள் யாரை பாதிக்கும் என்பது வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.

வாக்காளா்கள்

ஆண் வாக்காளா்கள்....1,16,013

பெண்வாக்காளா்கள்....1,20,238

திருநங்கைகள்....46

மொத்த வாக்காளா்கள்....2,36,297

மொத்த வாக்குச் சாவடிகள் 278

- ஜீவ. இராம. ஸ்ரீநிவாஸன்