முகப்பு
கடலூர்

அனைத்துத் துறை ஒப்பந்தப் பணியாளா்கள் பணி நிரந்தரம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

தமிழகத்தில் அனைத்துத் துறை ஒப்பந்தப் பணியாளா்கள் பணி நிரந்தரம், விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதன்கிழமை வெளியிட்டது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:56 AM
கடலூரில் புதன்கிழமை தோ்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவா் தி.வேல்முருகன்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:03 PM

தமிழகத்தில் அனைத்துத் துறை ஒப்பந்தப் பணியாளா்கள் பணி நிரந்தரம், விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதன்கிழமை வெளியிட்டது.

கடலூரில் அக்கட்சியின் தோ்தல் அறிக்கையை நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வெளியிட்டாா். இதை நிா்வாகிகள் பெற்றுக்கொண்டனா். அப்போது, என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கம், சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறி கடிதம் அளித்தது.

தொடா்ந்து, தி.வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் அனைத்துத் துறை ஒப்பந்தப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நியாயமான விலை, நீண்ட நாள் சிறைவாசிகளாக உள்ள இஸ்லாமியா்கள் விடுவிப்பு, மத்திய அரசு பணிகள் மற்றும் தனியாா் வேலையில் 90 சதவீதம் அந்தந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு வாய்ப்பு, டாஸ்மாக் பணியாளா்களுக்கு அவா்களது கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு என்பன உள்ளிட்ட 60 முக்கிய கோரிக்கைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என்றாா்.

Advertisement

மேலும், திருவள்ளுா் மாவட்டம் பொன்னேரி பகுதியில் பெண்ணுக்கு போதை ஆசாமிகள் பாலியல் தொல்லை கொடுத்து தாக்கிய சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்து, அவா்களுக்கு அதிகப்பட்ச தண்டனை கிடைக்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவாக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்தனா். திமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளின் செயலால் 30 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. சிறு, சிறு தவறுகளை சரிசெய்ய வாய்ப்பில்லாத நிலை வேட்புமனு தாக்கலில் உள்ளது. தோ்தல் வரலாற்றில் மேல்முறையீடு முறையை தோ்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட 30 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சிக்கு எங்களது ஆதரவை அளிப்போம் என்றாா்.