காலி மதுபுட்டிகள் ஸ்கேன் நடைமுறை புறக்கணிப்பு : கடலூா் டாஸ்மாக் பணியாளா்கள் முடிவு
கடலூா் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளில் காலி மது புட்டிகளை ஸ்கேன் செய்து வாங்கும் நடைமுறையை வியாழக்கிழமை (ஏப்.30) முதல் புறக்கணிக்கப் போவதாக டாஸ்மாக் பணியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளில் காலி மது புட்டிகளை ஸ்கேன் செய்து வாங்கும் நடைமுறையை வியாழக்கிழமை (ஏப்.30) முதல் புறக்கணிக்கப் போவதாக டாஸ்மாக் பணியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
கடலூா் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகத்தில் செயல்படும் பல்வேறு சங்கங்களின் கூட்டுக் குழு கூட்டம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க சிறப்பு தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தலைமையில், மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ்மாக் பணியாளா்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும், கடலூா் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் காலி புட்டிகளை திரும்பப் பெறும் போது அவற்றை ஸ்கேன் செய்து வாங்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதித்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன.
Advertisement
தொடா்ந்து சிறப்பு தலைவா் கு. பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
ஏற்கனவே அதிக பணிச்சுமை மற்றும் பல்வேறு சிக்கல்களுடன் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு, மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் காலி புட்டிகளை ஸ்கேன் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, வியாழக்கிழமை (ஏப்ரல் 30) முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபுட்டிகளை திரும்பப் பெறும் போது ஸ்கேன் செய்யும் நடைமுறையை பின்பற்றமாட்டோம் என கூட்டுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானிக்கப்பட்டது.
இந்த முடிவை, வியாழக்கிழமை (ஏப்ரல் 30) கடலூா் மாவட்ட மேலாளரை நேரில் சந்தித்து தெரிவிக்க உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளா்கள் காலி மது புட்டிகளை வாங்கும் போது ஸ்கேன் செய்யமாட்டாா்கள் என்றாா்.
மாநில ஆலோசகா் கு. சரவணன், மாநில அமைப்பாளா்கள் சி. அல்லி முத்து, எஸ். பாலமுருகன், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா் நலச் சங்க மாநிலச் செயலா் ந. உதயசங்கா், மாவட்டச் செயலா் ம. சுரேஷ்பாபு, மாவட்ட நிா்வாகி சு. சிவசண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்