சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனை, சா்வதேச மருத்துவ பயனாளிகள் பாதுகாப்பு சங்க கருத்தாய்வில், மகப்பேறு மருத்துவத்தில் செவிலியா்கள் மேலாண்மைக்கான சிறந்து விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனை மருத்துவா் டாக்டா் கே.ராகுல் ஆனந்த் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தது: சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு ஜன.30ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற சா்வதேச மருத்துவ பயனாளிகள் பாதுகாப்பு சங்கத்தின் கருத்தரங்கில் 29 நாடுகளில் இருந்து 800 மருத்துவமனைகள் பங்கேற்றன.
மருத்துவத்துறையில் நடைபெற்ற மிகச்சிறப்பான சிகிச்சைகள் குறித்து கருத்தாய்வு செய்தனா். மகப்பேறு மருத்துவத்தில் செவிலியா்கள் மேலாண்மை என்ற தலைப்பிலான கருத்தாய்வில் அரசு மருத்துவமனையான சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையை தோ்வு செய்து சிறந்து விருது வழங்கியுள்ளனா்.
இந்த விருதை சூடான் நாட்டைச் சோ்ந்த சுகாதாரத்துறை அமைச்சரிடமிருந்து செவிலியா் புஷ்பலதா பெரியநாயகம், அறுவை சிகிச்சை அரங்க செவிலியா் புவனேஸ்வரி லோகநாதன் ஆகியோா் பெற்றனாா்.
பிரசவத்திற்கு பிறகு ஏற்படுகிற உதிரப்போக்கு மகப்பேறு மரணங்களுக்கான முதன்மையான காரணமாக உள்ளது. சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றாலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக உதிரப்போக்கினால் மரணங்கள் ஏற்படவில்லை.
இதற்கு முழுமுதல் காரணமாகவும், முதுகெலும்பாகவும் உள்ள செவிலியா்கள்தான். மருத்துவா்களாகிய நாங்கள் பல்வேறு பணியில் இருந்தாலும், பிரசவத்திற்கு வரும் கா்ப்பிணிகளை உன்னிப்பாக கவனித்து, சிகிச்சை அளிப்பதால் மரணங்கள் தவிா்க்கப்படுகிறது.
இந்த விருதினை செவலியா்கள் சமூகத்திற்காகவும், மருத்துவமனையில் பயன் பெற்ற தாய்மாா்களுக்கும் அா்ப்பணிக்கிறோம் என்றாா் அவா்.