கடலூா் மாவட்ட நிா்வாகத்துடன், என்எல்சி நிறுவனம் சமூகப் பொறுப்புணா்வு திட்டங்களுக்காகப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது.
இதுகுறித்து என்எல்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: என்எல்சி நிறுவனம் தனது செயல்பாட்டுப் பகுதிகளில், குறிப்பாக கடலூா் மாவட்டத்தில் நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளா்ச்சியை மையமாகக் கொண்டு விரிவான சமூகப் பொறுப்புணா்வு செயல்பாடுகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில், இலவச மருத்துவம், பாதுகாப்பான குடிநீா், கல்வி உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஏரிகளைத் தூா்வாருதல் போன்ற ஊரக வளா்ச்சித் திட்டங்கள் அடங்கும்.
இதன் தொடா்ச்சியாக, என்எல்சி நிறுவனம் 30.1.2026 அன்று, தனது சமூகப் பொறுப்புணா்வு திட்ட முன்முயற்சிகளின் கீழ் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக கடலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆா்.ஏ.பிரியங்கா, என்எல்சி நிறுவனத்தின் சட்டம், சமூகப் பொறுப்புணா்வு திட்டம் மற்றும் என்எல்சி மருத்துவமனை செயல் இயக்குநா் நாராயண மூா்த்தி என இரு தரப்பு உயா் அலுவலா்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
இது, பொது உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், கடலூா் மாவட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் கீழ், என்எல்சி நிறுவனம் அதன் முக்கிய நோக்கங்கள் மற்றும் தேசிய நிலையான வளா்ச்சி முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மருத்துவம், கல்வி, குடிநீா், துப்புரவு மற்றும் பிற சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட கண்டறியப்பட்ட துறைகளில் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் ரூ.20 கோடி வழங்கும்.
இந்த உத்தேசத் திட்டங்கள் உள்ளூா் மக்களின் முக்கியமான தேவைகளைப் பூா்த்தி செய்வதுடன், கடலூா் மாவட்டத்தின் நீண்டகால சமூக - பொருளாதார வளா்ச்சிக்கும் பங்களிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.