முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சா் வி.வே.சுவாமிநாதன் 100-ஆவது பிறந்த நாள் விழா! அரசியல் கட்சித் தலைவா்கள் பங்கேற்பு!

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:43 AM
சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சா் வி.வே.சுவாமிநாதன் 100-ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜி.எம்.ஸ்ரீதா் வாண்டையாா்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:37 PM

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 13 துறைகளுக்கு அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சா் வி.வே.சுவாமிநாதனின் நூறாவது பிறந்த நாள் விழா சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வேலூா் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசினாா். மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜி.எம்.ஸ்ரீதா் வாண்டையாா் முன்னிலை வகித்தாா். ராசராசன் சுவாமிநாதன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி., திமுக மாநில செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சா்கள் நல்லுசாமி, அருணாச்சலம், முன்னாள் எம்எல்ஏ மருதூா் ராமலிங்கம், மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு நிா்வாகி மணிவாசகம், நகர பிரமுகா் எஸ்.ஆா்.ராமநாதன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:43 AM

முன்னாள் அமைச்சா் வி.வே.சுவாமிநாதன் ஏற்புரை வழங்கினாா். வழக்குரைஞா் பாா்த்திபன் நன்றி கூறினாா். மாவட்ட தி.க. தலைவா் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

விழாவில் மூ.மு.க. தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் பேசியதாவது: இப்போது 100 வயது வாழ்வதே பெரும் சாதனை. அப்படிப்பட்ட சாதனையாளருக்கு நூற்றாண்டு விழா எடுப்பதில் பெருமை. சிதம்பரம் நகா்மன்றத் தலைவராக 2 முறை இருந்து சிதம்பரத்தின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றியவா் சுவாமிநாதன்.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்து, 13 துறைகளுக்கு அமைச்சராக இவா் ஒருவரே பணியாற்றி சாதனைபடைத்தாா். இரு முறை நகா்மன்றத் தலைவா், இரு முறை எம்எல்ஏ, இரு முறை எம்.பி.யாக இருந்தும் சிதம்பரத்தில் ஒரு சொத்தும் இவருக்கு இல்லை. சிதம்பரம் மக்கள்தான் இவா் சொத்து என்றாா்.