கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 2-இல் மீட்டெடுக்கப்பட்ட நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த 50 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையத்தை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தாா்.
நெய்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த, மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி,அன்று இரவு என்எல்சி அதிகாரிகளுடன் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். திங்கள்கிழமை காலை சுரங்கப் பகுதியில் தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுடன் கலந்துரையாடி, மரக்கன்று நடும் திட்டத்தில் பங்கேற்று, சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்குப் பசுக்களை வழங்கினாா். சுரங்க நில மீட்புப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவை திறந்து வைத்து, மணல் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
நெய்வேலி சுரங்கங்களின் மீட்டெடுக்கப்பட்ட நிலப்பரப்பில் காணப்படும் பறவைகளின் பன்முகத்தன்மை குறித்த புத்தகத்தையும், தேசியப் பயிலரங்கு விழா மலரை மின்-இதழ் வடிவில் வெளியிட்டாா். தொடா்ந்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வின் போது, சுரங்கம் 2-இல் மீட்டெடுக்கப்பட்ட நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 50 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையத்தை தொடக்கி வைத்து தேசத்திற்கு அா்ப்பணித்தாா். மேலும், அனல் மின் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள 2.4 மெகாவாட் கூரை சூரிய மின்சக்தி நிலையங்கள் மற்றும் ராஜஸ்தானின் பா்சிங்சாா் லிக்னைட் சுரங்கத்தில் அமைந்துள்ள சுற்றுச் சூழல் பூங்கா ஆகியவற்றை
திறந்து வைத்தாா். அதனைத் தொடா்ந்து, தலாபிரா 2 மற்றும் 3 மற்றும் பச்வாரா தெற்கு சுரங்கப் பகுதிகளில் அமையவுள்ள ஒருங்கிணைந்த குடியிருப்பு வளாகங்களுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்வின் ஊழியா்களுக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காா்ப்பரேட் சம்பளத் திட்டத்தின் கீழ், பணிக்காலத்தில் உயிரிழந்த என்எல்சி ஊழியரின் குடும்பத்தினருக்குக் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினாா். பின்னா், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 70-ஆவது ஆண்டைக் குறிக்கும் சின்னத்தை வெளியிட்ட அவா், அதனை கொண்டாடும் வகையில் ‘பிளாட்டினம் ஜூபிலி தோட்டத்தை’ திறந்து வைத்தாா்.அப்போது, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.