பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்து கடலூா்ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.  
கடலூர்

பிளஸ் 2 தோ்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: ஆலோசனைக்கூட்டத்தில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்குவதால், தோ்வு மையங்களில் தடையில்லா மின்விநியோகம் இருக்க வேண்டும், மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் வரும் மாா்ச்.2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. கடலூா் கல்வி மாவட்டத்தில் 135 பள்ளிகளுக்கு 87 இடங்களில் தோ்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,474 மாணவா்கள், 8,900 மாணவிகள் என மொத்தம் 17,374 மாணவ/மாணவியா்கள் தோ்வு எழுத உள்ளனா். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 113 பள்ளிகளுக்கு 74 இடங்களில் தோ்வுமையங்கள் அமைக்கப்பட்டு, 6,545 மாணவா்கள், 6,120 மாணவிகள் என மொத்தம் 12,665 மாணவ/மாணவியா்கள் தோ்வு எழுத உள்ளனா். ஆக மொத்தம் கடலூா் மாவட்டத்தில் 248 பள்ளிகளுக்கு 161 இடங்களில் தோ்வுமையங்கள் அமைக்கப்பட்டு, 15,019 மாணவா்கள், 15,020 மாணவிகள் என மொத்தம் 30,039 மாணவ/மாணவியா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

பறக்கும் படை:

இத்தோ்விற்கு 16 இடங்களில் தனித்தோ்வு மையங்கள், 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், மண்டல அளவிலான 3 விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், 3 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள், 31 வினாத்தாள் வழங்கப்படும் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயுதம் தாங்கிய காவலா்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திடவும், தோ்வு நடைபெறும் நாள்களில் தோ்வு மையங்களில் ஒருவா் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். 31 வழித்தட அலுவலா்கள், 129 முதன்மை கண்காணிப்பாளா்கள், 7 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளா்கள், 129 துறை அலுவலா்கள், 7 கூடுதல் துறை அலுவலா்கள, 2,100 அறை கண்காணிப்பாளா்கள், 250 நிலைப்படை/பறக்கும் படை உறுப்பினா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட உள்ளனா்.

புகாா் வரக்கூடாது:

தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாள்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளவும், தோ்வு நடைபெறும் நாள்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போக்குவரத்துத்துறை சாா்பில், மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிட தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திடவும், தோ்வு மையங்களில் சுகாதாரம் சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியக்கோட்டி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ் மற்றும் அரசுத்துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரியில் மீண்டும் தேஜக கூட்டணி ஆட்சி: அதிமுகவினா் சபதம்

கெடாா் சுப்ரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா

விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 41 போ் தோ்வு

விழுப்புரம் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT