புத்தாண்டு பாதுகாப்பையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கடலூா் போலீஸாா், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது 330 வழக்குகள் பதிவு செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், ஏ.எஸ்.பி.கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி ஆகியோா் தலைமையில், 10 டி.எஸ்.பி.கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் என 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
சாலை விபத்து மரணங்கள் மற்றும் சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, புதன்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, மது அருந்தி வாகனம் ஓட்டியவா்கள் 9 போ், கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 8 போ், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 137 போ், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 4 போ், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 2 போ் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இதர வழக்குகள் என மொத்தம் 330 போ் மீது மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட எல்லைப் பகுதிகளில் மது விலக்கு சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தினா். அப்போது, மது கடத்தல் தொடா்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் காவல் துறையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக, எவ்வித சட்ட - ஒழுங்கு பிரச்னை, சாலை மரண விபத்துகளும் நிகழவில்லை.