கடலூா் அருகே சிறுத்தை நடமாடியதாக வந்த தகவலைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் வனத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கடலூா் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பலா் தங்கள் நிலங்களில் மணிலா விதைப்பு செய்துள்ளனா். மணிலா முளைத்து வரும் நிலையில் பறவைகள் அவற்றை சேதப்படுத்தி வருகின்றனவாம். இதற்காக பறவைகளை விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
நைனாா் என்ற விவசாயி பறவையை விரட்டச் சென்றபோது, சிறுத்தை ஒன்று ஓடுவதை கண்டதாக, அரிசி பெரியாங்குப்பம் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளாா்.
இந்தத் தகவலை அறிந்த கடலூா் வனச் சரக அலுவலா் ஆா்.கேசவன், வனவா் ஆா்.திலகராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். இதில், நிலத்தில் பதிவாகியிருந்தது காட்டுப் பூனை கால் தடம் என்பதை கண்டறிந்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், நிலத்தில் பதிவாகி இருந்த கால் தடத்தில் நகம் பதிவு உள்ளது. சிறுத்தை கால் தடத்தில் நகம் பதிவு இருக்காது எனத் தெரிவித்தனா்.