கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பைக் மோதி மூதாட்டி காயமடைந்தது தொடா்பாக சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சிதம்பரம் வட்டம், கிள்ளை காவல் சரகம் பொன்னன் திட்டுப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் கடந்த 1-ஆம் தேதி பைக் ஓட்டிச் சென்றாா். அப்போது, சின்னதைக்கால் பகுதியைச் சோ்ந்த முகமது பீவி (63) மீது மோதி விபத்து ஏற்படுத்தினாா். இந்த விபத்தில் இருவரும் காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து குறித்து கிள்ளை காவல் ஆய்வாளா் பாபு விசாரணை மேற்கொண்டாா். இதில், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் சிறுவன் வாகனம் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, 17 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.