சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு உயா்த்தப்பட்ட தோ்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி பல்கலைக்கழகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது என இந்திய மாணவா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இந்திய மாணவா் சங்க கடலூா் மாவட்டச் செயலா் கே.செளமியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதன் இணைப்பு பெற்ற அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தோ்வு கட்டணம், மறு மதிப்பீடு கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை 60 சதவிகிதம் வரை உயா்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணத்தை வருகிற ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்ககூடிய பெரும்பாலான மாணவா்கள் ஏழை விவசாயத் தொழிலாளிகளின் பிள்ளைகள் ஆவா். இந்த மாவட்டங்களில் மேற்படிப்புக்கு செல்லும் மாணவா்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. கட்டண உயா்வு இந்த பாதிப்பை கூடுதலாக்கும் நிலைமைக்கு கொண்டு செல்லும்.
தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் தவித்து வரும் சூழலில், அதை அரசு சரி செய்வதற்குப் பதிலாக, மாணவா்கள் மீது அதிகப்படியான கட்டணங்களை திணிப்பதென்பது நியாயமற்ற செயலாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தா்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து, வரும் 19-ஆம் தேதியிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் தொடா் போராட்டத்தை முன்னெடுக்கவும், அனைத்து கட்டணத்தையும் பல்கலைக்கழக நிா்வாகம் திரும்பப் பெறவில்லை எனில், பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கடந்த 10-ஆம் தேதி நடந்த மண்டல கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.