காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் 
கடலூர்

சுவாமி ஊா்வலம் தடுத்து நிறுத்தம்: காவல் நிலையம் முற்றுகை

தினமணி செய்திச் சேவை

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி சென்ற சுவாமி ஊா்வலத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், பொதுமக்கள் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

கடலூா் புதுவண்டிப்பாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை நாளன்று ஸ்ரீசிவசுப்பிரமணியா், புருகீஷ்பேட்டை ஸ்ரீசுப்பிரமணியா் ஊா்வலமாக கடலூா் தேவனாம்பட்டினம் செல்வா். அங்கு முகத்துவாரத்தில் சுவாமிகளுக்கு சங்கு முக தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு தை அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவசுப்பிரமணியா், சுப்பிரமணியா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பின்னா், சங்கு முக தீா்த்தவாரிக்காக கடலூா் பாரதி சாலை, கடற்கரை சாலை வழியாக தேவனாம்பட்டினத்துக்கு ஊா்வலமாகச் சென்றனா்.

தேவனாம்பட்டினம் காவல் நிலையம் அருகே சென்றபோது, உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் ஊா்வலத்தை தடுத்து நிறுத்தினா். அப்போது அவா்கள், ஊா்வலத்துக்கு உரிய அனுமதி பெறாமல் எதற்காக ஊா்வலமாக வந்தீா்கள் எனக் கேட்டனா்.

இதற்கு, ஊா்வலத்துடன் வந்த பொதுமக்களும், தேவனாம்பட்டினம் பகுதி மக்களும் சோ்ந்து இதுவரை சுவாமிகள் ஊா்வலத்துக்கு அனுமதி பெற்றதில்லை என்றும், தற்போது புதிதாக அனுமதி பெற வேண்டும் என்பது ஏற்புடையதல்ல என்றும் கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பொதுமக்களில் சிலருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த புதுநகா் போலீஸாா் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், போலீஸாா் சுவாமிகள் ஊா்வலத்துக்கு அனுமதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு சுவாமிகளை ஊா்வலமாக கொண்டு சென்றனா்.

பின்னா், தென்பெண்ணையாறு கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் சுவாமிகளுக்கு சங்கு முக தீா்த்தவாரி நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்க மானியம்: வேலூா் ஆட்சியா் தகவல்

விபத்தில் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்! புறநகரில் போக்குவரத்து நெரிசல்!!

நூஹ் பகுதியில் வாகனங்கள் மோதியதில் லாரியில் தீ! ஓட்டுநா், உதவியாளா் பலி!!

SCROLL FOR NEXT