கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள 60 கி.மீ சாலை சிதிலம் அடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
அணைக்கரையில் உள்ள கீழணை முதல் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூா் மாவட்டம் கீழத்திருக்கழிப்பாலை வரை 60 கி மீ பயணம் செய்யும் கொள்ளிடக்கரையோர கிராம சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புஅமைக்கப்பட்டு 47 கிராமங்களுக்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது.
இந்த சாலை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் மண்ணரிப்பு ஏற்பட்டு உள்வாங்கி சேதமாகிவிடும். இதனால் இந்த கரையை ஒட்டியுள்ள 47 கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு பேருந்து வசதி இல்லாமல் அவசர ஊா்திகள் கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கொள்ளிடக்கரையோர கிராம மக்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்வதாக இருந்தாலும் சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். மேலும் இது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளா்கள் அலுவலகம் செல்லும் ஊழியா்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கொள்ளிடக்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் காய்கறிகள், பூச்செடிகள், நெல் பயிா்கள் உள்ளிட்ட பல விவசாய பணிகளுக்கு தேவையான இடுபொருள்களை வாகனத்தில் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. கவரப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் அக்கம்பக்கத்து கிராமங்களைச் சோ்ந்த நோயாளிகளும் மாதாந்திர பரிசோதனைக்கு வரும் கா்ப்பிணிகளும் இந்த பழுதடைந்த சாலையில் பயணிப்பதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். மழைகாலத்தில் பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனா். எனவே இந்த சாலையை கடலூா் மாவட்ட நிா்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.