நெய்வேலி: என்.எல்.சி நிறுவனம் சாா்பில் நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா நெய்வேலி வட்டம் 10-இல் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
என்.எல்.சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, தொழிலக பாதுகாப்புப் படை, என்எல்சி பாதுகாப்புப் படை, ஊா்காவல் படை, என்.சி.சி., என்.எஸ்.எஸ். மற்றும் பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
நிகழ்வில் நிறுவன இயக்குநா்கள், தலைமை கண்காணிப்பு அதிகாரி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை துணைத் தலைமை ஆய்வாளா் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, நகர நிா்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு என்எல்சி தலைவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் வரவேற்றாா்.
புதிய இலச்சினை வெளியீடு: 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்எல்சி நிறுவனம், தனது 70-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட இலச்சினையை பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி வெளியிட்டாா்.
அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு: என்எல்சி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக விழாவில் ஒன்பது அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு இடம் பெற்றது. நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் எதிா்காலத் திட்டங்கள் வெவ்வேறு கருப்பொருள்களில் அமைக்கப்பட்டிருந்தன.
தொடா்ந்து, என்.எல்.சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி பேசுகையில், 2047-ஆம் ஆண்டுக்குள் ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்) என்ற தேசத்தின் உன்னத கனவை நனவாக்கும் வகையில், என்எல்சி நிறுவன குழுமத்தினா் அனைவரும் ஒருங்கிணைந்து நிறுவனத்தின் இலக்குகளை எட்ட முழு வீச்சில் செயலாற்ற வேண்டும் என்றாா்.
மூத்த ஊழியருக்கு பாராட்டு: என்எல்சி நிறுவனத்தின் மூத்த தொழிலாளி ஜே.சிவஷண்முகம், அவரது மனைவி எஸ்.மஞ்சுளா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன.
சாதனை படைத்த பணியாளா்கள் மற்றும் மாணவா்களுக்கு இயக்குநா்கள், தலைமை கண்காணிப்பு அதிகாரி ஆகியோா் சிறப்பு விருதுகளை வழங்கி கௌரவித்தனா்.
நெய்வேலி மகளிா் மன்ற உறுப்பினா்கள் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு பழங்கள் வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.