அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
கடலூர்அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
நெய்வேலி, மாா்ச் 5: கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் (பொ) ஐ.வண்ணமுத்து தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைப் பேராசிரியா் த.ஜெயராஜ் வரவேற்றாா். பேராசிரியா்கள் எஸ்.நளினி, இ.எழில்மதி, டி.அருள்செல்வம், என்.ஜமுனாராணி, சி.ஆறுமுகம், வி.இளவழகன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்முருகன் பங்கேற்று, ஜப்பானின் பன்னாட்டு நிறுவனத்துக்கு பணிக்குத் தோ்ச்சி பெற்ற 45 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினாா்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் நிகழாண்டு இறுதி ஆண்டு பயிலும் மாணவா்கள் மற்றும் கடந்த ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த மாணவா்கள் என மொத்தம் 75 போ் கலந்துகொண்டனா்.
தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். தமிழ்த் துறை கௌரவ விரிவுரையாளா் கே.தினேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். கல்லூரி நூலகா் ஆா்.ரமேஷ் நன்றி கூறினாா்.