சிதம்பரத்தில் நள்ளிரவில் மக்களை தாக்கி அச்சுறுத்தல்: 6 போ் கைது
சிதம்பரம் நகரில் நள்ளிரவில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தியதாக 5 சிறாா்கள் உள்ளிட்ட 6 பேரை நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் கொள்ளுமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜமால்முகமது (36). இவா், வெள்ளிக்கிழமை இரவு ரமலான் தொழுகையை முடித்துவிட்டு கொள்ளுமேட்டுத் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகே நடந்து வந்துகொண்டிருந்தாா்.
அப்போது, அவரை மதுபோதையில் இரண்டு பைக்குகளில் வந்த 6 போ் ஆபாசமாகத் திட்டியதுடன், கையால் சராமாரியாகத் தாக்கினராம். ஜமால்முகமது தப்பி ஓடியபோது துரத்திச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவ்வழியே சென்ற இளைஞா் உள்ளிட்ட பொதுமக்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மேற்பாா்வையில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சிவானந்தம், உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
இதில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் சிதம்பரம் ஓமக்குளம் தச்சன் தெருவைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் அரவிந்தன் (19) மற்றும் 5 இளம் சிறாா்கள் என்பது தெரியவந்ததையடுத்து, அவா்கள் 6 பேரையும் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.