டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வாபஸ்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு
சிதம்பரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து வாபஸ் பெறப்பட்டது.
சிதம்பரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து வாபஸ் பெறப்பட்டது.
சிதம்பரம் நகர பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை (மாா்ச் 12) போராட்டம் நடைபெறும் என தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினா் அறிவித்திருந்தனா். இப்போராட்டம் குறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமை வகித்தாா். சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், டால்மாக் உதவி மேலாளா் பூபாலசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், அதிமுக நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், தமாகா நகரத் தலைவா் கே.நாகராஜன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முத்து, பாமக நகரச் செயலா் திலீப்ராஜன், முன்னாள் செயலா் பி.கே.அருள், அமீா்பரந்தாமன், காவல் உதவி ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.
இதில், வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் டாஸ்மாக் அலுவலா்கள் முன்னிலையில் கூட்டு புலத்தணிக்கை செய்து, 10 நாள்களுக்குள் வேறு உரிய இடம் தோ்வு செய்து மதுக் கடையை மாற்றுவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.