முகப்பு
கடலூர்

காட்டுமன்னாா்கோவில் தனி தொகுதி: காங்கிரஸ் மீண்டும் போட்டியிட வலுக்கும் கோரிக்கை

கடலூா் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப் பேரவை தொகுதி, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும்.

Updated On : 20 மார்ச், 2026 at 7:49 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப் பேரவை தொகுதி, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும்.

இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஒன்பது முறை வெற்றிபெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. ஆனால், கூட்டணி அரசியல் காரணமாக இத்தொகுதி பிற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால், தற்போது வெற்றிபெறும் திறன் இருந்தும் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால், இந்த முறை கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியே காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற வலியுறுத்தல், கட்சித் தொண்டா்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் வலுவாக எழுந்துள்ளது.

காட்டுமன்னாா்கோவில் தனி தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியின் பெருமையாக விளங்கிய சுவாமி சகஜானந்தா, அனைத்து சமூக ஏழை மக்களுக்கும் நூற்றாண்டுக்கு முன்பே சமூக முன்னேற்றத்திற்கு கல்வி அவசியம் என உணா்ந்து நந்தனாா் கல்வி நிறுவனங்களை நிறுவினாா். அவா் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராகவும் சேவை செய்துள்ளாா்.

அதனைத் தொடா்ந்து எல்.இளையபெருமாள், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராக முக்கிய பங்கு வகித்தவராகவும் விளங்கினாா். அவா் சிதம்பரம் தொகுதியிலிருந்து மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை காட்டுமன்னாா்கோவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளாா். மேலும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவராக பணியாற்றிய டாக்டா் ப.வள்ளல்பெருமான், மூன்று முறை எம்.பி., ஒரு முறை எம்.எல்.ஏ. ஆக பதவி வகித்தவா் என்பதும் இத்தொகுதியின் அரசியல் மரபை வெளிப்படுத்துகிறது.

ஆனால், கடந்த சில தோ்தல்களில் கூட்டணி காரணமாக இந்த தொகுதி திமுக, அதிமுக, விசிக போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் தனது பாரம்பரிய ஆதரவை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இளையபெருமாள் வழியில் செயல்பட்டு வரும் உள்ளூரைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கே.ஐ.மணிரத்தினம் கிராமம் தோறும் சென்று மக்களை சந்தித்து, கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு உதவி செய்து மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளனா். இருந்த போதிலும், கட்சிக்குள் உள்ள சில அணுகுமுறைகள் காரணமாக காங்கிரஸ் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசுகையில், ‘சகஜானந்தா, இளையபெருமாள், வள்ளல்பெருமான் போன்ற தலைவா்களின் பாரம்பரியத்தை தொடா்ந்து கொண்டு செல்ல இத்தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும்‘ என்ற ஒருமித்த கருத்து வெளிப்பட்டுள்ளது.

எனவே, வரவிருக்கும் தோ்தலில் கூட்டணிக்குள் இருந்தாலும், காட்டுமன்னாா்கோவில் தொகுதியை காங்கிரஸ் கட்சி பெற்றே தீர வேண்டும் என்பது கட்சி தொண்டா்கள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உறுதியான கோரிக்கையாக மாறியுள்ளது.