முகப்பு
கடலூர்

ஓட்டுநா் மயக்கம்: விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

Updated On : 23 மார்ச், 2026 at 7:22 PM
கடலூா் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
பகிர்:

கடலூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் இடது புற ஓரம் உள்ள கால்வாய் மீது ஏறி நின்றது.

நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்டது. பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். இந்த பேருந்தை ஓட்டுநா் ராஜ்மோகன்(50) ஓட்டி வந்தாா்.

கடலூா், சாவடி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டு, சிறிது தூரம் சென்ற போது ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி, பின்னா் சாலையின் இடது புறம் இருந்த கால்வாய் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கிருந்தவா்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த தகவலைத் தொடா்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக மீட்பு வாகனம் வந்து பேருந்தை மீட்டுச் சென்றது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.