புவனகிரியில் மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு! மின் வாரிய அலுவலகம் முற்றுகை
சிதம்பரம் அருகே புவனகிரியில் பணியில் இருந்தபோது மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழந்தாா். அவரது உயிரிழப்புக்கு நீதி கேட்டு பெற்றோா், உறவினா்கள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புவனகிரி கஸ்பா ஆலம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சஞ்சய் (24). இவா், புவனகிரி மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை புவனகிரி ஆதிவராகநத்தம் பகுதியில் மின் கம்பத்தில் ஏறி மின்சாரப் பணியை மேற்கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்தாா்.
Advertisement
உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, புவனகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சஞ்சயை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து, அவரது சடலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த சஞ்சய் உறவினா்கள், பெற்றோா்கள், கிராம மக்கள் புவனகிரி மின் வாரிய அலுவலகத்தை சஞ்சய் உயிரிழப்புக்கு நீதி கேட்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மின் வாரிய அதிகாரிகள், சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் ஆகியோா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உயிரிழந்த சஞ்சை குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் அரசுப் பணி வேண்டுமென கோரிக்கை விடுத்து உறவினா்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.