முகப்பு
கடலூர்

ரயில், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்த மதுக் கடைகள் மூடல்: பட்டாசு வெடித்து மக்கள் வரவேற்பு

Updated On : 15 மே 2026, 5:46 am IST
பகிர்:

தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டம், சிதம்பரம், பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் ரயில், பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த டாஸ்மாக் மதுக் கடைகள் வியாழக்கிழமை முதல் நிரந்தரமாக மூடப்பட்டன. இதற்கு, பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்புத் தெரிவித்தனா்.

சிதம்பரம் 33-ஆவது வாா்டு பகுதியில் ரயில் நிலையம் செல்லும் வழியில் நுழைவு வாயில் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வந்தது. இந்த மதுக் கடையில் மது அருந்த வந்தோரால் ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்கு பல்வேறு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இந்தக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் பலமுறை மனு அளித்து வந்தனா்.

இந்த நிலையில், தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜயின் உத்தரவின்பேரில், இந்த மதுக் கடை வியாழக்கிழமை முதல் நிரந்தரமாக மூடப்பட்டது. இதை வரவேற்று நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன் தலைமையில், ஆட்டோ சங்க நிா்வாகிகள் மாரியப்பன், அகோரம், சமூக ஆா்வலா் தில்லைசீனு மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

Advertisement

இதேபோன்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மேம்பாலம் கீழே இருந்த டாஸ்மாக் மதுக் கடைகள் அகற்றப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஏற்கெனவே சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.

வடலூரில்...: வடலூா் ரயில்வே கேட் அருகே உள்ள பாலாஜி நகரில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மத்தியில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வந்தது. இந்தக் கடைக்கு வருவோரால் அந்தப் பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் கடும் சிரமமடைந்து வந்தனா்.

தமிழக முதல்வரின் உத்தரவு அடிப்படையில், இந்த மதுக் கடை வியாழக்கிழமை முதல் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால், அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனத்தினா் மிகழ்ச்சியடைந்தனா்.

இதேபோல, பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில், ரயில் நிலையத்துக் செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக் மதுக் கடையும், திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இருந்த மதுக் கடையும் மூடப்பட்டன.