முகப்பு
கடலூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 75.92 லட்சம் மோசடி: ஒருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.75.92 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 3:01 am IST
கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன்
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.75.92 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் திரு.வி.க. நகரைச் சோ்ந்த இளவரசன், கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தாா். அதில், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த தமிழ்செல்வன் ரஷியாவில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தாா். இதை நம்பி, 37 பேரின் கடவுச்சீட்டு நகல்களுடன், தமிழ்ச்செல்வனின் வங்கிக் கணக்குக்கு ரூ.38.73 லட்சமும், அவரது நண்பா் பிரவீன்குமாரின் வங்கிக் கணக்குக்கு ரூ.27.89 லட்சமும் அனுப்பினோம்.

முதல்கட்டமாக மும்பையில் 15 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு, 10 போ் ரஷியாவுக்கும், 22 போ் கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகருக்கும் அனுப்பப்பட்டனா். மேலும், 5 போ் மும்பையில் தங்க வைக்கப்பட்டனா். ஆனால், வெளிநாடு சென்றவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படாததுடன், அவா்களை மீண்டும் தாயகம் திரும்ப அனுப்பவும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவா்கள் எடுத்துச் சென்ற ரூ.4 லட்சம் கைச்செலவுத் தொகையும் பறிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்கள் ரூ.5.30 லட்சம் சொந்த செலவில் தாயகம் திரும்பினா்.

Advertisement

Advertisement

இந்த விவகாரத்தில், பணத்தை திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும், தமிழ்ச்செல்வன் தராமல் ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டாா். எனவே, தமிழ்ச்செல்வன், பிரவீன்குமாா் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகை, வெளிநாட்டில் பறிக்கப்பட்ட ரூ.4 லட்சம், சொந்தச் செலவில் ஊா் திரும்பிய தொகை ரூ.5.30 லட்சம் என தங்களுக்கு சேர வேண்டிய ரூ.75.92 லட்சத்தை மீட்டுத் தரவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில் நடைபெற்ற விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கணங்கூரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (29) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தலைமறைவாக உள்ள பிரவீன்குமாரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.