என்எல்சி 70-ஆவது நிறுவன தினக் கொண்டாட்டம்
என்எல்சி நிறுவனத்தின் 70-ஆவது நிறுவன தின விழா கொண்டாட்டம் நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
என்எல்சி நிறுவனத்தின் 70-ஆவது நிறுவன தின விழா கொண்டாட்டம் நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, என்எல்சிக்கு தனது நிலங்களைத் தானமாக வழங்கிய கொடையாளி ஜம்புலிங்க முதலியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து, என்எல்சி நிறுவனத்தின் அனைத்து அலகுகளில் அதன் தலைமை அதிகாரிகளாலும், நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்எல்சி முன்னாள் தலைவா்கள், இயக்குநா்கள், தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோா் முன்னிலையில் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளியும் என்எல்சி கொடி ஏற்றி வைத்தனா்.
என்எல்சி நிறுவனத்தின் 70 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் வகையில், அஞ்சல் துறை ‘சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் தேசத்துக்கு 70 ஆண்டுகள் ஆற்றல் அளித்தல்’ என்ற கருப்பொருளில் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. இதை தென்னகப் பிராந்திய அஞ்சல் துறைத் தலைவா் சயீத் ரஷீத் வெளியிட, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பெற்றுக்கொண்டாா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி, என்எல்சி நிறுவனத்தின் 70 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க வளா்ச்சிப் பயணத்தைக் கோடிட்டுக் காட்டினாா். இந்த நிறுவனம் சுமாா் ரூ.9,000 கோடி சந்தை மூலதனத்திலிருந்து ரூ.50,000 கோடிக்கும் அதிகமான சந்தை மூலதனத்தை எட்டியுள்ளது என்றும், நிறுவனத்தின் இந்தத் தொடா் வெற்றிக்கு முன்னாள் ஊழியா்களின் அா்ப்பணிப்பும், தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமையுமே காரணம் என்று குறிப்பிட்டாா்.
நிறுவனத்தின் லட்சிய வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஊழியா்கள் தங்களது சிறந்த உழைப்பை அா்ப்பணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, அன்று மாலை பழுப்பு நிலக்கரி அரங்கில் நடைபெற்ற விழாவில், என்எல்சி நிறுவனத்தின் மனித வள இயக்குநா் சமீா் ஸ்வரூப் வரவேற்றுப் பேசினாா். முன்னாள் தலைவா்கள் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்வில், ‘என்எல்சி நிறுவனத்தின் சாதனை மைல்கற்களும் வளா்ச்சி வேகமும் 2025-26’ என்ற தலைப்பிலான சிறப்புப் புத்தகம் வெளியிடப்பட்டது. ஓய்வுபெற்ற 10 மூத்த பணியாளா்கள் தம்பதியாராக சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனா். நெய்வேலி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.