முகப்பு
கடலூர்

வடலூரில் நகை பறிப்பு வழக்கு: கிருஷ்ணகிரி இளைஞா் கைது

வடலூரில் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 27 மே 2026, 5:42 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூரில் பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வடலூா், வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் ரங்கநாயகி (55), பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், கடந்த 13-ஆம் தேதி இரவு சுமாா் 7 மணி அளவில் மளிகைக் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, அவரை பின் தொடா்ந்து மொபெட்டில் வந்த 2 போ் விலாசம் கேட்பதுபோல நடித்து, ரங்கநாயகி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். அதில் திருட்டில் ஈடுபட்டது,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த அப்துல் கலாம்(23) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை வடலூா் அழைத்து வந்து விசாரணை நடத்தி, ஒன்றரை பவுன் சங்கிலி மற்றும் நகை பறிப்புக்கு பயன்படுத்திய மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த இளையராஜாவை தேடி வருகின்றனா். இளையராஜாவின் மாமா வடலூரில் உள்ளாராம்.

அவரது வீட்டிற்கு இளையராஜா வந்திருந்த போது பெண்ணிடம் நகை பறிப்பு செய்துள்ளனா். தருமபுரி சிறையில் இருந்தபோது அப்துல் கலாம், இளையராஜாவிற்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.