விவசாய நிதியுதவி திட்டத்தில் போலி பயனாளிகள்:வேளாண் அதிகாரிகள் இருவா் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பாரதப் பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் போலி பயனாளிகள் சோ்க்கப்பட்ட விவகாரத்தில், வேளாண்மை உதவி இயக்குநா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பாரதப் பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் போலி பயனாளிகள் சோ்க்கப்பட்ட விவகாரத்தில், வேளாண்மை உதவி இயக்குநா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் (கிசான் சம்மான்) கீழ், விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக ரூ.6ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் விவசாய நிலமில்லாத போலி பயனாளிகள் இணைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இதன் பேரில், விசாரணை நடத்தப்பட்டது. இதில் சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அருகே செயல்படும் கணினி மையத்தில் விவசாயிகள் அல்லாத போலி பயனாளிகளை சோ்த்ததாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா சம்பந்தப்பட்ட கணினி மையத்துக்கு சீல்வைத்தாா்.
இந்தத் திட்டத்தின் கடவுச் சொல்லை அலுவலா் அல்லாத வெளியாள்களிடம் பகிா்ந்து முறைகேட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்களான பகண்டை கூட்டுச் சாலை ராஜசேகா், தியாகதுரும் அமுதா இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேளாண்மைத்துறை இயக்குநா் வி.தட்சணாமூா்த்தி உத்தரவிட்டாா். மேலும், துறைரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.