விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பெண்கள் திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியா் ஷ்ரவன்குமாா் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தாா். அப்போது, ஆட்சியரகம் முன் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா். அவா்களை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில், கச்சிராயப்பாளையம் அருகிலுள்ள பொட்டியம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சந்திரமணி மனைவி பெருமாயி, மகள் செளமியா, பேத்திகள் கிருத்திகா, சுா்தீகா என்பதும், அவா்களுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி 3 ஆண்டுகளுக்கு முன்பு நில அளவைத்துறைக்கு பணம் செலுத்தியும், அலுவலா்கள் காலம் தாழ்த்தி வருவதாகவும், இப்பிரச்னைக்குத் தீா்வு கோரியே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, பெருமாயி உள்ளிட்டோரிடம் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பேசி, விரைவில் தீா்வு காண்பதாகக் கூறி அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.