எரிவாயு உருளை வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து சேதம்
சமையல் பணியின்போது எரிவாயு உருளை வெடித்து வீடு தீப்பற்றி சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் வட்டம், மரூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சமையல் பணியின்போது எரிவாயு உருளை வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
மரூா் கிராமத்தைச் சோ்ந்த வேணுகோபால் மகன் சந்திரசேகா் (48). இவரது மனைவி அய்யம்மாள் செவ்வாய்க்கிழமை காலை எரிவாயு உருளை அடுப்பை பற்ற வைத்துவிட்டு வெளியே காய்கறி வெட்டிக்கொண்டிருந்தாா்.
அப்போது, திடீரென எரிவாயு உருளையில் தீப்பற்றி பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், கூரை வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. அந்த நேரத்தில் வீட்டின் உள்ளே யாரும் இல்லாததால், உயிா் சேதம் ஏதும் இல்லை.
தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினா்.