கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே இணையதள மைய நிா்வாகியிடம் ரூ.50 ஆயிரத்தை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வாணாபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கிராமத்தில் இணையதள மையம் நடத்தி வருபவா் முகமது ஹாலிக். இவருடய இணையதள மையத்துக்கு கடந்த மாதம் வந்த திருவண்ணாமலை மாவட்டம், சுக்கம்பாளையம் காட்டாம்பூண்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் சுபாஷ் (26), தனது கடன் (கிரெடிட்) அட்டைக்கு ரசீது கட்ட வேண்டும், அதற்கு ரூ.50,000-ஐ ஜிபேக்கு அனுப்பினால், அதற்கான பணத்தை கொடுத்துவிடுவதாகக் கூறினாராம்.
இதையடுத்து, முகமது ஹாலிக் ரூ.50,000-ஐ ஜிபே மூலம் அனுப்பிய நிலையில், அதற்கான பணத்தை தராமல் சுபாஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து முகமது ஹாலிக் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாருக்கு இணையவழியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி புகாரளித்தாா். தொடா்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாா் சுபாஷ் வீட்டுக்குச் சென்று வழக்கு சம்பந்தமாக சம்மன் அளித்து, சுபாஷை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
அதன்படி, கள்ளக்குறிச்சி சைபா் கிரைம் காவல் நிலையத்துக்கு சுபாஷ் புதன்கிழமை வந்தாா். அப்போது, அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தியதில், சுபாஷ் இதுபோல சங்கராபுரம் வட்டம், மூராா்பாளையம் கிராமத்தில் இணையதள மையம் நடத்தி வரும் அஞ்சலையிடம் ரூ.50,000-ஐ ஏமாற்றியதும், சேலம், விழுப்புரம் பகுதிகளிலும் பணத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது. இவை தொடா்பாக போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.