கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 417 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், மனுக்களைப் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 412 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 5 மனுக்களும் என மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உதவி உபகரணம் வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நபருக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி, 2 நபா்களுக்கு மடக்கு சக்கர நாற்காலி, 3 நபா்களுக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், ஒரு நபருக்கு ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் திறன்பேசி என மொத்தம் 7 பேருக்கு ரூ.1.61 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா்
வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.