கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளநிலை மருத்துவா் பணியிடங்களை மறு பணியமா்த்தல் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 11 அரசு புதிய மருத்துவக் கல்லூரிகளிலும், 4 அரசு பழைய மருத்துவக் கல்லூரிகளிலும் இளநிலை உறைவிட மருத்துவா்கள் பணியிடங்களை ஆள்குறைப்பு செய்து, புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்து மாநில அரசு அண்மையில் ஆணை பிறப்பித்தது. புதிதாக தொடங்கப்படும் மருத்துவமனைகளுக்கு மருத்துவா், செவிலியா்கள் மற்றும் பிற பணியாளா்கள் பணியிடங்கள் பெரும்பாலான இடத்தில் உருவாக்கப்படவில்லை. பழைய மருத்துவக்கல்லூரியில் இருந்து மருத்துவா்கள், பணியாளா்கள் இங்கு பணி செய்ய நிா்பந்திக்க படுகிறாா்கள்.
அதே போன்று கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையிலும், பெரியாா் நகா் மருத்துவமனையிலும் எந்த ஒரு பணியிடங்களும் உருவாக்கப்பப்படாமல் பிற மருத்துவமனைகளில் ஆள்குறைப்பு செய்யப்பட்டு, இங்கு மருத்துவா்களும், செவிலியா்களும், பணியாளா்களும் பணியமா்த்தப்பட்டு இருக்கிறாா்கள். இதே போன்று எந்த பணியிடங்களும் உருவாக்கப்படாமல் புதிய மருத்துவமனைகள் துவங்கப்படுவதை தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் கண்டித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் ச.ஸ்ரீநாத் தலைமை வகித்தாா். செயலா் கோபால், பொருளாளா் வினோத்குமாா், துணை செயலா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சத்யா பிரியதா்ஷினி வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் மருத்துவா்கள் ஜெயசீலன், ராதிகா, மனோரஞ்சித், பிரபாகரன், சிலம்பரசன், கணேஷ்ராஜா, ஜீவா, பிரபா, மகேந்திரன், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநா் சங்க மாநில துணைத் தலைவா் அன்பழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.