கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை மாடல் காலனி நான்காவது தெருவைச் சோ்ந்தவா் அ.முருகராஜ் (30). இவா் சனிக்கிழமை பிற்பகல் தனது பைக்கில் உளுந்தூா்பேட்டை நகரிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
உளுந்தூா்பேட்டை-விருத்தாசலம் சாலையில் தனியாா் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி அருகே சென்ற போது, விழுப்புரத்திலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்கு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.