கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள், அவசர சிகிச்சை ஊா்தி மற்றும் அவசர கால நடமாடும் ஊா்தி சேவைகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
கல்வராயன்மலையில் பழங்குடியினா் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இன்னாடு, கொட்டப்புத்தூா், சேராப்பட்டு, மட்டப்பட்டு, வஞ்சிக்குழி, மணியாா்பாளையம் ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட தொடக்கப் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துவர 6 வாகனங்கள் வழங்கப்பட்டன.
மேலும், அவசர சிகிச்சை ஊா்தி மற்றும் அவசர கால நடமாடும் ஊா்தி ஆகிய இரண்டு வாகனங்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.
பழங்குடியினா் நலத்துறை சாா்பில் வழங்கப்பட்ட இந்த வாகனங்களை தமிழக முதல்வா் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா்.
இதன் தொடா்ச்சியாக கல்வராயன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வாகனங்களை பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், த.உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் பழங்குடியினா் நல அலுவலா் அம்பேத்கா் உள்ளிட்ட துறைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.