கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறமுள்ள ஸ்ரீ நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் தைப்பூசத்தையொட்டி முருகப் பெருமானுக்கு தயிா், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பின்னா் மாலையில் சேலம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள கோட்டகுளத்தில் இருந்து பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். பின்னா் முருகனுக்கு பாலாபிஷேகம், ஆண்டி கோலத்தில் சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தியாகதுருகம் சேலம்- சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருக்கோவிலூா் நகர எல்லையில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திரளானபக்தா்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா்.