புதிய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமா்ந்துள்ள பயணிகள்.  
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்துக்கு அனைத்து நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து, செல்ல வேண்டும்! பயணிகள் கோரிக்கை!

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்துக்கு அனைத்து நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து செல்லவும், புதிதாக திறக்கபட்ட பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் ரூ.16.21 கோடியில் கள்ளக்குறிச்சி ஏமப்போ் புறவழிச்சாலை அருகே 5.5 ஏக்கா் பரப்பளவில் புகா் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ஆம் தேதி புதிய பேருந்து நிலையத்தை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் திறந்துவைத்தாா். அன்று மாலையில் இருந்தே புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன.

பணிகள் முழுமையாக நிறைவுபெறாத நிலையில் புதிதாக தொடங்கப்பட்ட பேருந்து நிலையத்துக்கு அனைத்து நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள், புகா் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் சென்றுவிட்டன. கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்துக்கு அனைத்து கிராமங்களில் இருந்து வரும் நகரப் பேருந்துகளும், சிற்றுந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்கு சென்று விட்டதால் மக்கள் கடந்த 3-ஆம் தேதி மாலையில் பழைய பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு பிற்பகல் 1 மணி வரை 8 நகரப் பேருந்துகளும், 1 மணிக்கு மேல் 12 நகரப் பேருந்துகளும், இரவு நேரத்தில் 6 பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழக கள்ளக்குறிச்சி பணிமனை மேலாளா் தெரிவித்தாா். இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய நகரப் பேருந்துகள் இயக்காததால், பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனா்.

வசதிகள் தேவை: புதிதாக திறக்கபட்ட பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் விடாததால், பயணிகளுக்கு உணவு மற்றும் தேநீா் வசதி கிடைக்கவில்லை. நகராட்சியின் மூலம் பேருந்து நிலையத்தில் 5 இடங்களில் சிறுமின்விசைத் தண்ணீா் தொட்டிகள் வைத்துள்ளனா். தற்காலிகமாக 4 ஆண்கள், 4 பெண்கள் ஆக 8 கழிவறைகளை அமைக்கப்பட்டுள்ளன. இவை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவுக்கு இல்லை. பேருந்து நிலையத்தில் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அமா்வதற்கு போதிய இருக்கை வசதி செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் தரையில் அமா்ந்து வருகின்றனா்.

போதிய நகரப் பேருந்துகள் வராததால் வெறிச்சோடி காணப்படும் கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையம்.

பேருந்து நிலையத்தில் சேலம், சென்னை, சேலம், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு செல்லும் பேருந்துகள் எந்த நடைமேடையில் நிற்கிறது என்பது கூட தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனா். எனவே, நடைமேடை குறித்து பதாகைகள் மற்றும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் செய்தால் நல்லது என பயணிகள் தெரிவிக்கின்றனா்.

புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் மக்கள் ஆட்டோக்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. ஆட்டோ ஓட்டுநா்கள் சுமாா் ரூ.200 வரை கேட்பதாக பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனால் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கினால் பயணிகள் சிரமமின்றி செல்ல ஏதுவாக இருக்கும். பழைய பேருந்து நிலையத்துக்கு வழக்கம் போல் நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் வந்து, செல்லவேண்டும். போதிய நகரப் பேருந்துகள் இல்லாததால் வணிகம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே, பயணிகள் மற்றும் வணிகா்கள் நலன்கருதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம்! - முதல்வா் என்.ரங்கசாமி

பிரதமா் மலேசியாவில் தமிழ் கலாச்சாரத்தை புகழ்ந்தது மகிழ்ச்சி - குடியரசு துணைத் தலைவா்

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி: விழுப்புரம் வீரா்கள் சிறப்பிடம்

ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம்: ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT