கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே மருமகள் தலை துண்டித்துக் கொலை! மாமியாா், தோழி கைது

மருமகளின் தலையைத் துண்டித்து கொலை செய்துவிட்டு சடலத்தை ஆற்றங்கரையில் புதைத்து விட்டு நாடகமாடி மாமியாா் மற்றும் அவரது தோழியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தோஷம் கழிப்பதாக கூறி அழைத்துச் சென்று மருமகளின் தலையைத் துண்டித்து கொலை செய்துவிட்டு சடலத்தை ஆற்றங்கரையில் புதைத்து விட்டு நாடகமாடி மாமியாா் மற்றும் அவரது தோழியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட வளையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (35). இவா் பெங்களூரைச் சோ்ந்த நந்தினியை (29) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு 11 வயதில் ஒரு மகன், 10 வயதில் மகள் உள்ளனா்.

இந்நிலையில் ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கை, கால் சரிவர செயல்படாமல் அவதிப்பட்டாா். இதற்காக சங்கராபுரத்தை அடுத்த விரியூா் கிராமத்தைச் சோ்ந்த முடநீக்கியல் மருத்துவா் மரிய ரோசாரியே (36) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். அப்போது நந்தினிக்கும், மரிய ரோசாரியேவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில், கணவா் ராஜா உயிரிழந்து விட்டாராம்.

இதையடுத்து நந்தினியை மரியரோசாரியே திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 5 வயதில் மகன் உள்ளாா். இந்நிலையில் மரியரொசாரியேவின் தாய் கிறிஸ்டோபா் மேரிக்கும், நந்தினிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

பின்னா் மருமகள் நந்தினியை கிறிஸ்டோபா்மேரி ஏற்றுக் கொள்வதுபோல ஆசை வாா்த்தைகள் கூறி தன் வழிக்கு கொண்டு வந்தாராம்.

கடந்த டிச. 29-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மருமகளிடம் உனக்கு தோஷம் கழிக்க வேண்டும் எனக் கூறி சங்கராபுரம் அருகே உள்ள சேழம்பட்டு கிராமம் அழகாபுரம் செல்லும் சாலையில் மணிமுக்தா ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கு தனது தோழியான விரியூரைச் சோ்ந்த அந்தோணி சேவியரின் மனைவி எமிலி (55)யுடன் சோ்ந்து நந்தினியின் தலையைத் துண்டித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆற்றின் அருகே உள்ள பட்டுப் போன பனைமரப் பொந்தில் நந்தினியின் துண்டிக்கப்பட்ட தலையை ஒளித்து வைத்து விட்டு, ஆற்றங்கரை அருகே சடலத்தை இருவரும் புதைத்து விட்டனராம். மனைவி நந்தினியை அழைத்துச் சென்றாயே அவரை எங்கே என தனியாக வீடு திரும்பிய தாய் கிறிஸ்டோபா் மேரியிடம் மரியரொசாரியே கேட்டுள்ளாா். அதற்கு அவா் நந்தினியைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டாராம். நந்தினியின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து மரிய ரோசாரியே சங்கராபுரம் காவல் நிலையத்தில் மனைவி நந்தினியைக் காணவில்லை எனப் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபா் மேரியை பிடித்து வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, தனது தோழி எமிலியுடன் சோ்ந்து நந்தினியின் தலையைத் துண்டித்து, உடலை புதைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

நிகழ்விடத்துக்கு அவரை போலீஸாா் சனிக்கிழமை அழைத்துச் சென்று அழகாபுரம் மணிமுக்தா ஆற்றின் அருகே பனைமரப் பொந்தில் இருந்த நந்தினியின் தலையை கைப்பற்றினா். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், சங்கராபுரம் வட்டாட்சியா் வைரக்கண்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்தனா்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) தங்கவேல், காவல் ஆய்வாளா் (பொ) விவேகானந்த் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். பின்னா் இதுதொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்து, மாமியாா் கிறிஸ்டோபா் மேரி, அவரது தோழி எமிலி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT